நிலாக்கால நினைவுகள் - 5
'வார்டனின்' அன்பு !
https://www.youtube.com/watch?v=_uAE2d0u3Ko
'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' - என்ன ஒரு அற்புதமான பாடல் ! 'திருவருட்செல்வர்' படத்திலிருந்து! எனது பழைய நினைவுகளுக்குப் புதிய வண்ணம் தீட்டும்பல பாடல்களில் இதுவும் ஒன்று !
1967 தீபாவளி ஸீஸன் ! அப்போது நான் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் சேர்ந்த புதிது. "வெளியுலகம் தெரிய வேண்டும், மனிதர்களுடன் பழக வேண்டும் , அறியாத பிள்ளையாயிருக்கிறான்" என்று பல காரணங்கள் சொல்லி என் விருப்பத்திற்கு மாறாக கல்லூரி விடுதியிலேயே என்னைத் தங்கவைத்து விட்டார்கள். எனது குழந்தைத்தனமான சுபாவம் 'ஹாஸ்டல் வார்டனுக்கு' மிகவும் பிடித்துப் போய் நான் அவரது செல்லப் பிள்ளையாகிவிட்டேன். எனக்கு மட்டும் வாராவாரம் சனிக்கிழமை வீட்டுக்குச் செல்ல அனுமதி கொடுப்பார். மற்றவருக்கெல்லாம் மாதம் ஒரு முறைதான்! சக நண்பர்களுக்கு ஒரு பக்கம் பொறாமையும், ஒரு பக்கம் பரிகாசமாகவும் இருக்கும்! ஒவ்வொரு முறை திங்களன்று காலேஜ் போக சுணங்கியதும் சித்தப்பா ஆதரவுடன் தட்டிக் கொடுத்து லீவு எடுக்க அனுமதித்ததும், லீவு லெட்டர் கொடுத்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள் !
இப்படியிருக்கையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியது திருவருட்செல்வர் படம், பல்லாவரம் ஜனதா தியேட்டரில் ! தீபாவளி மறுநாள் விடுதி நண்பர்களுக்கு படத்தைப் பார்க்க ஆசை! முறையாகச் செல்ல மாலைநேரக் காட்சிக்கு வார்டன் அனுமதி தரமாட்டார். எனவே என் நண்பர்கள் என்னைத் 'தாஜா' பண்ண ஆரம்பித்தனர், வார்டனிடம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்க ! நான் பயந்து கொண்டே அவரிடம் பீடிகை போட்டு விஷயத்தைச் சொல்ல, எப்படியோ அனுமதித்து விட்டார் ! நண்பர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அப்படிப் பார்த்த படம்தான் திருவருட்செல்வர்.
நான்கு பேருக்குக் கொடுத்த பர்மிஷனில், என்னையும் ஏமாற்றி இன்னும் பத்து பேர் படம் பார்த்துத் திரும்பும்போது சுவரேறிக் குதித்து, வார்டனிடம் நான் வாங்கிக் கட்டிக்கொண்டது தனிக்கதை ! "மற்றவர்கள் உன்னை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள, என்பதைப் புரிந்துகொள். அதற்கு அவர்களை எப்போதும் அனுமதிக்காதே!" என்று அவர் எனக்கு புத்திமதி சொன்னது இன்னும் நினைவில் பசுமை ! அவர் என்மேல் கொண்டிருந்த தனி அன்புக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன் !
Comments
Post a Comment