நிலாக்கால நினைவுகள் - 2


கட்டற்ற அன்பு, கலப்பற்ற பாசம் !


https://www.youtube.com/watch?v=xq0l5yT818U

இன்று மாலை சகோதரி லதா எனக்கு அனுப்பியிருந்த ஒரு பழைய திரைப்பாடல் கொண்ட அருமையான  காணொளி ஒன்று , எனது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

'பட்டப்பா' என்று நாங்கள் செல்லமாக அழைக்கும்  ராஜம் மாமாவின் அன்பு என்னை அரவணைத்துச் சென்றுகொண்டிருந்த என் பள்ளிக் காலம் என் நினைவுகளில் அலை மோதியது.  'தாயடித்தால் தந்தையோடி  அணைப்பார், தந்தை அடித்தால் தாயோடி அணைப்பாள் ' என்ற அழகிய வரிகள் , என் வாழ்வின் வழியில் அழுத்தப் பதிந்துவிட்டன ! வேலை நிமித்தமாக வெளியுயூரில் வாழ்ந்திருந்தனர் எனது தந்தையும் தாயும். எனவே நான் வளர்ந்தது முற்றிலும் என் அத்தையிடமும் பிற்காலத்தில் என் சித்தப்பாவிடமும்தான். குறையொன்றும் எனக்கிருந்ததில்லை என்றும் !  குறிப்பாக மேற்சொன்ன பாடல் என் மனதில் துளிரவைத்த நிகழ்ச்சி குறித்துச் சொல்லவந்தேன் நான் ! முதலில் அதை முடித்து விடுகிறேன்!

நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலம். அம்பத்தூர் ராமசுவாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு ! எனக்கு எப்போதுமே கணக்கு, விஞ்ஞானம் இரண்டும் வேப்பெண்ணெய்தான் ! ஒருநாள் மாலை, பட்டப்பா ஆபிசிலிருந்து வீடு வரும் வேளையில்   நான் ஒரு மூலையில் நின்று அழுதுகொண்டிருந்தேன். வீட்டில் மற்ற பிள்ளைகள் விளையாட்டுப் போய்விட்டார்கள் . அழுது கொண்டு நின்ற என்னைப்  பார்த்ததும் அவர் அருகில் ஓடிவந்து அரவணைத்துக் காரணம் வினவினார்.  உள்ளிருந்து அத்தையின் குரல் உயர்ந்தது "ஆமாம், அவனைக் கொஞ்சுங்கோ! உருப்பட்டுடுவான் !  பரீட்சையில் எல்லாப் பாடத்துலயும் சுழிச்சிருக்கான்,   பரீட்சை நேரத்தில படிக்காம ரேடியோ நாடக விழா கேட்டுண்டிருந்தான். அப்போவே எனக்குத் தெரியும்"   அத்தையின் கோபத்தில் பயந்திருந்த என்னை, தான் வாங்கி வந்திருந்த பக்கோடாவைக் கொடுத்து அன்பாகப் பேசி  சமாதானப் படுத்தினார்.    'வா சினிமாவுக்குப் போகலாம்'  என்று அழைத்துக் கொண்டு  போனார். அதன் பிறகு போகும் வழியில், "அது சரி! கணக்கு உனக்கு கஷ்டம்.ஒத்துக்கறேன் ! ஆனா தமிழ்ல போயி  எப்படிடா உன்னால நாற்பது, நாற்பத்தித்தியஞ்சுன்னு மார்க் வாங்க முடிஞ்சது? போனால் போகட்டும். இனிமே ஒழுங்காப் படி" என்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்றால், அது மிகையில்லை !   அப்படிக் கூட்டிக்கொண்டு போய்க் காண்பித்த படம்தான் 'ஜெகதலப்ரதாபன்' . அந்தப் படத்திற்காக சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய , தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த, அற்புதமான பாடலான 'சிவசங்கரி சிவானந்த லஹரி'  என்ற காட்சியின் காணொளிதான் சகோதரி லதா இன்று மாலை எனக்கு அனுப்பியிருந்தது ! என் நினைவுகள் மலர்ந்து, பலனை எதிர்நோக்காத அத்தை மற்றும் அத்திம்பேரின் அன்புமணத்தை மீண்டும் நுகர வைத்தன இந்தக் கணங்கள் !

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......