நிலாக்கால நினைவுகள் - 14

"என்னுயிர்த் தோழி கேளொரு சேதி"




'அமீர் கல்யாணி' ராகம் என்றதும் முதலில் என் நினைவுக்கு வருவது 'கர்ணன்' திரைப் படத்தில் வரும் இந்தப் பாடல்தான் ! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது! கர்ணன் படத்தில் அத்தனை பாடல்களுமே அற்புதம். இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி; பாடல்கள்: கவியரசர் கண்ணதாசன்; இந்தப்பாடலைத் தன் தேனினும் இனிய தீங்குரலில் வழங்கியிருப்பவர் திருமதி பி.சுசீலா அவர்கள். பாடலின் இடையில் ஒரு நீண்ட 'ஹம்மிங்' , நம்மை அப்படியே பிரமிக்க வைக்கும், எப்படி இத்தனை நேரம் 'ஹம்மிங்' கொடுக்கிறார் என்று ! என்ன ஒரு திறமை !
மெல்லிசை மன்னர்களின் இசைக்கு எத்தனை அள்ளிக் கொடுத்தாலும் போதாது ! இவர்களின் இசைக்கு அந்தக் கர்ணன் கொடுக்கும் கொடையையே துலாபாரம் நிறுத்தினால் கூட, இசையின் தட்டு தாழ்ந்தே இருக்கும் ! அப்படி ஒரு தரம் ! ஒவ்வொரு பாடலும் கர்நாடக இசைப் பின்னணியில் மனதை மயக்குகின்றன.
கவியரசரின் பாடல்கள் தனிநிறம் காட்டும் ! சொல்லவே தேவையில்லை ! "வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்" - இது ஒன்று போதுமே !
அரசன் ஆனாலும் கணவன்தானே ! "தன் உயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே," இந்த வரிகளை பாருங்கள் ! 'அவனில்லாமல் நான் உயிர் தரிக்க இயலாது. பிற உயிர்களைத் தன்னுயிர் போல் காப்பான் என்கிறாயே! இதுதான் என்னுயிரை அவன் காக்கும் அழகோ' என்கிறாள் ! ஒரே வரியில் உணர்வின் கதையையே உரித்து வைக்கிறான் கவிஞன் !

இசைக்கும் வரிகளுக்கும் இணையாக நிற்பது நடிகர் திலகத்தின் அயராத, அற்புதமான நடிப்பு ! வாழ்ந்திருக்கிறார் கர்ணனாக ! நட்பு என்ற உணர்வின் மேன்மையை அவரது நடிப்பு ஒன்றே நமக்கு உணர்த்தத் தகுதி வாய்ந்தது !
வண்ணம் கண்ணைக் கட்டும் ! பிரம்மாண்டமான போர்க்காட்சிகள் பிரமிப்பூட்டும். சக்தி கிருஷ்ணசாமியின் வசனம் வார்த்தை ஜாலங்களின் உச்சம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி. , அசோகன், முத்துராமன், என்.டி.ராமராவ், தேவிகா, எம்.வி.ராஜம்மா, என்று ஒரு முன்னணி நடிக, நடிகையர் பட்டாளமே இதில் உண்டு. மொத்தத்தில் , முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை ரசிகர்களைக் கட்டிப் போட்டு விடும் ஒரு அற்புதப் படைப்பு !

கி. பாலாஜி
ஆகஸ்ட் 31 2018

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......