நிலாக் கால நினைவுகள் - 13

'மாலையும்  இரவும்  சந்திக்கும்  இடத்தில்' 



சகோதரி லதா இன்று என் நினைவுகளை மலர்விக்க நினைந்து அனுப்பிய ஒரு அற்புதமான பாடல் !  1961  இல் வெளிவந்த 'பாசம்' திரைப்படத்தின் பல இனிமையான பாடல்களில் இது என் மனம் கவர்ந்த ஒன்று. இந்தப் படத்தை நாங்கள் பார்த்தது 1961  இல் தான் ! மறக்கமுடியுமா அந்த இனிமையான நாளை ! எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் என்றால் அவை அமுத கானமாகத்தான் இருக்கும். பாடல்களுக்காகவே படத்தைப் பார்க்க விரும்புவேன் ! 1964 க்கு மேல் பல படங்களை  மாமாவின் அலுவலகத்தில் தொழிலாளர் சங்க வளாகத்தில் பார்த்ததுண்டு. அப்படி, மாமா கூட்டிச் சென்ற ஒரு படம்தான் 'பாசம்' ! இசை மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் - ராமமூர்த்தி.  பாடல் கவியரசர் கண்ணதாசன்!  மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலைப் பாடியவர்கள் திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜானகியம்மா ! இனிமையான குரல்கள் ! நல்ல பொருத்தம் !  இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் கல்யாண்குமார் மற்றும் ஷீலா ! பொருத்தமான நடிப்பு ! விரசமில்லாத காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் நடிப்பு.! இன்னும் என் நினைவில் உள்ளது , ஆலம் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு இருவரும் ஆடிக் கொண்டே பாடும் வரிகள் ! 
            'காவிரிக்  கெண்டை மீன் போலே
            இரு கைகள் படாத தேன் போலே
            கோவில் முன்புறச் சிலை போலே
            எனைக் கொஞ்சி அணைத்த வெண்மலரே ' 

உண்மையான காதல் பார்ப்போரின் மனதில் கண்டிப்பாக ஏற்படும்! அந்த வரிகளும் அற்புதமானவை ! கவியரசர் என்றால் கேட்கவா வேண்டும் ! 

மனமயக்கத்தைத் தந்தவள் நீயே  வழியில் வந்தவள் நீயே' என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் 'ஆ'  என்ற ஜானகியம்மாவின் ஹம்மிங்கிற்கு உயிரையே கொடுத்துவிடலாம் !  பாடல் முழுதும் நிறைய இடங்களில் இந்த ஹம்மிங்கிற்கு உள்ள அழகே தனி ! அதுவும் ஒரு இடத்தில்  'தாவி தழுவ வந்தாயே'  ஆனவுடன் ஆண்குரலின் பாடல் வரிகளுடன் இணையும் விதமாக ஒரு ஹம்மிங் ! அப்போது அது ஒரு புதிய உத்தியாக மனதில் தோன்றியது ! 

           'பூமியில்  ஓடிய  புது  வெள்ளம்  போலே
            பொங்கி  வந்தவன்  நீயே 
            நெஞ்சில்  தங்கி  வந்தவன்  நீயே 
            எந்தன்  தலைவன்  என்பதும்  நீயே  
            தாவி  தழுவ  வந்தாயே '

அடுத்து வரும் கண்ணியின் தொடர்ச்சியாக உள்ள வரிகள் கனன்று கொண்டிருக்கும் உள்மனக் காதலை மென்மையாக வெளிப்படுத்துகின்றன ! கவிஞன் இங்கே வாழ்கிறான் ! 

            'பூ  மழை  பொழியும்  கொடியாக
             பூரண  நிலவின்  ஒளியாக 
             மாமணி  மாடத்து  விளக்காக 
             மார்பில்  அணைத்த  மன்னவனே 
             என்னை  மார்பில்  அணைத்த  மன்னவனே  (ஆஹாஹா)

'திங்கள்  முகத்தில்  அருள்  ஏந்தி - ஆஹா 
செவ்வாய்  இதழில்  நகை  ஏந்தி  - ஓஹோ 
இளமை  என்னும்  படை  கொண்டு 
என்னை  வென்றாய்  நீ  இன்று 
ஆஹா  என்னை வென்றாய்  நீ  இன்று .. ஆஹா'  -

இது இன்னும் அற்புதம் ! கவியரசரின் எந்தப் பாடல்தான் சோடை போனது !  போதாதா குறைக்கு இந்த மெல்லிசை மன்னர்கள் வேறு பிய்த்து வாங்குகிறார்கள் ! அது என்ன அப்படிப்பட்ட ஒரு இசை !  அனைத்தையும் விட இன்றும் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருப்பது பி.பி.எஸ்.- ஜானகி இருவரின் குரல்கள்தான் ! தேன் வந்து பாயும் நம் காதினிலே !  ஒளிப்பதிவு மிகவும் அருமை இந்தப் பாடலுக்கு ! 

ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு படைத்திருக்கிறார்கள் இதனை ! 'யாரை எப்படிப் புகழ்வது என்று யாருக்கும் புரியலே'  என்று பாடத்தான்  தோன்றுகிறது ! 

--கி. பாலாஜி 
  ஆகஸ்ட் 25 2018 

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......