நிலாக் கால நினைவுகள் - 9


மலரும் வான் நிலவும் சிந்தும் ஒலியெல்லாம்..




ஆஹா ! நினைவுகளைக் கிளறிவிடும் அற்புதமான ஒரு பாடல் ! என் தம்பி பாபு இன்று அனுப்பியிருந்த 'மலரும் வான் நிலவும்' என்ற பாடல் ! அம்பத்தூர் டென்ட் கொட்டாயில் பார்த்த எண்ணற்ற படங்களில் ஒன்று 'மகாகவி காளிதாஸ்' ! அற்புதமான படம் . படங்களைத் தேர்ந்தெடுத்துதான் எங்களைக் கூட்டிச் செல்வார் பட்டப்பா! அந்தப் பன்னிரண்டு/பதின்மூன்று வயதில் பார்க்கும் அனைத்துமே ஆச்சர்யமாக இருக்கும் ! அதுவும் சினிமா என்பது எஙகளுக்கு அளவிடற்கரிய ஒரு வரம் ! பார்த்துக் கொண்டிருக்கும்போதே கதையில் வரும் நகைச்சுவை, நடிப்பு, பாடல் அனைத்தையும் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பார். இதனால் தேவையற்ற சில காட்சிகளை குழந்தைகள் பார்க்க நேரிடாது ! நல்ல உத்தி ! புராணப் படங்களை பற்றிய கதைகளை முன்கூட்டியே எங்களுக்கு சொல்லியும் இருப்பார். அதனால் படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது. பதினாறு வயது வரை குழந்தைத்தனம் மாறாமலேயே இருந்துவிட்ட அந்தக் காலகட்டங்கள் மறக்கவே முடியாது ! இன்றைய குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பல விஷயங்களும் ஆச்சர்யமாகவே   இருக்கும் !  

ஒப்புயர்வற்ற வரிகள் கொண்ட இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் . இசை கே.வி.மகாதேவன்.. பாடியவர் டி.எம்.சொளந்தர்ராஜன். நடிப்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! வரிகள், இசை,பாடல், நடிப்பு அனைத்துமே ஒன்றை ஒன்று விஞ்சியதாகத்தான் இருக்கும்.. ஒவ்வொன்றுக்காகவும் தனித்தனியே ஒருமுறை படத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். அத்தனை சிறப்பு அனைத்தும்!  இதே பாடல், காட்சிக்குத் தக்கபடி, வரிகளில் சில மாற்றங்களுடன்  இசையரசி பி.சுசீலா அவர்கள் பாடியதும் இந்தப் படத்தில் உண்டு. அது தலைவி தலைவனைக் குறித்துப் பாடுவதுபோல் இருக்கும். ஆனால் இங்கே கொடுத்துள்ள பாடல் கவிஞன் இயற்கையன்னையின் கொடையைக் குறித்துப் பாடுவது போல் இருக்கும். மிக அருமையான வரிகள் . ரம்மியமான இசையுடன், டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் , நடிகர் திலகத்தின் அனாயாசமான நடிப்புடன் இதை பார்க்கும்போது , வேறு சொர்க்கமே வேண்டுவதில்லை எனத் தோன்றுவது இயல்பே !   

வரிகளின் அழகைப் பாருங்கள் : 'மண்ணையும் நீரையும் படைத்தனை இறைவா' என்ற விருத்தத்தைத் தொடர்ந்து வரும் பாடல் வரிகள்: 

மலரும் வான் நிலவும் சிந்தும் 
அழகெல்லாம்  உன்.எழில் வண்ணமே 
குழலும் யாழிசையும் கொஞ்சும் 
ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே            (மலரும்)

மழையில்லாமல் வளமில்லை ஒரு
விதையில்லாமல் பயிரில்லை
உழைப்பில்லாமல் உலகில்லை உன் 
உறவில்லாமல் நானில்லை                           (மலரும்)

கனவில் தோன்றி சிரிக்கின்றாய் நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில்ரசமாய் இனிக்கின்றாய் என் 
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்        (மலரும்)

கவிஞன் இயற்கையோடு தான் இயைந்துவிட்ட தன்மையை மிக அழகாக எடுத்துரைக்கிறான் !  எத்தனை எளிமையான , அதே நேரம் அழுத்தமான வரிகள் ! பொருள் பொதிந்த வரிகள் !  என்றும் மறக்க முடியாத , என் இதயம் கவர்ந்த வரிகள் ! 

--கி.பாலாஜி
ஆகஸ்ட் 08  2018 

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......