நிலாக் கால நினைவுகள் - 10
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
இன்று என் தம்பி பாபு அனுப்பியிருந்த இன்னொரு சிறந்த பாடல் , 'திருவிளையாடல்' படத்திலிருந்து 'பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்' என்ற பாடல். மனம் பின்னோக்கிப் பறந்து பறந்து வட்டமடிக்கிறது , கேட்கும்போது ! பட்டப்பாவே இரண்டு முறை கூட்டிச் சென்றிருக்கிறார் இந்தப் படத்திற்கு எங்களை ! ஐம்பத்து மூன்று வருடங்கள் ஆனாலும் கூட , அந்த இனிய காலங்கள் இன்னும் மனதை நிறைக்கின்றன !
அற்புதமான படம், பாடல்கள் ! கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்குத் தகுந்தாற்போல் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு ! திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் அற்புதமான இசை! டி.எம்.எஸ். அவர்களின் வெண்கலக்குரல்! இந்தப் பாடலின் வரிகளுக்குத் தகுந்தாற்போல் வேடமிட்டு நிற்கவைத்த பாத்திரங்களின் வரிசை ! வண்ணப் படங்கள் அருகியிருந்த அந்தக் காலத்தில், ஈஸ்ட்மென் கலர் வண்ணப்படம் ! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கம், திரைக்கதை, வசனம், தயாரிப்பு ! பொருத்தமான நடிகர்கள் ! ஒவ்வொரு நடிகரின் சோடை போகாத நடிப்பு ! அற்புதமான புராணக் கதை மற்றும் கதையமைப்பு ! ஆஹா! சொல்லிக் கொண்டே போகலாம். முடிவே கிடையாது.
முக்கியமாக இந்தப் பாடலில், வரிகளின் சிறப்பு அளவிடற்கரியது ! சிறந்த தத்துவப்பாடலை ஒரு எளிமையான தமிழில், தெளிவான வரிகளில் தந்திருக்கிறார் கவியரசர். தத்துவம் மட்டுமல்ல, சமூகத்தில் நம்மிடையே நிலவுகின்ற ஒவ்வொரு வகைப்பட்ட மனிதர்களையும் சாடுகின்ற விதத்தில் இருக்கும் வரிகள் ! 'யாக்கை நிலையாமை' என்ற கருத்தை எளிமையான வரிகளில் எழுதி, தத்துவத்தின் சிகரத்தை எட்டிப் பிடித்திருப்பார்.
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா.......
கட்டழகு மேனியைப்பார்
பொட்டும் பூவுமா நீட்டிக்
கட்டையிலே படுத்துவிட்டா காசுக்காகுமா
அடுத்து, இந்தியப் பொருளாதார சீர்கேட்டை ஓரிரண்டு வரிகளில் சாடியிருப்பர் ! இந்த வரிகளைப் பாருங்கள்:
பொன்னும் பொருளும் மூட்ட
கட்டி போட்டு வெச்சாரு
இவரு
போன வருஷம்
மழையை நம்பி வெத வெதச்சாரு
ஏட்டுக் கணக்க மாத்தி
மாத்தி எழுதிவெச்சாரு
ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை
போய் விழுந்தாரு
எத்தனை மூட்டை கட்டிப் பணத்தைச் சேர்த்து வைத்தாலும், வரவு செலவுக் கணக்கை மாற்றி மாற்றி எழுதி வைத்து வரிகளைக் கட்டாமல் அரசாங்கத்தை ஏய்த்துப் பணம் சேர்த்து வைத்தாலும், இறைவன் போட்ட கணக்கு மாறாது ! இறப்பைத் தவிர்க்க முடியாது ! இடுகாட்டுக்கு சேர்த்து வைத்த செல்வம் கூட வாராது என்பதை எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறார் இந்த வரிகளில் !
அடுத்து சமூகத்தில் சிலரது நடவடிக்கைகள் பற்றிய கருத்துக்கள் சில வரிகளில் !
பத்து புள்ளை பெத்த பின்னும் எட்டுமாசமா
இந்த பாவி மகளுக்கெந்த
நாளும் கர்ப்ப வேஷமா
நான்கே கண்ணிகளுள்ள இந்தப் பாட்டில், குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம், பதுக்கல், கருப்புச் சந்தை, வரி ஏய்ப்பு போன்ற நாட்டுக்குத் தேவையான பல முக்கியமான செய்திகளை, மூல தத்துவமான 'யாக்கை நிலையாமை' என்பதின் அடிப்படையில், மிக அழகாகத் தெளிவு படுத்தியுள்ள பாங்கு மிக மிக அருமை ! அதனால்தான் அவர் கவியரசர் !
திரைஇசைத் திலகத்தின் இசைக்கு இன்னும் எவரேனும் ஈடாக முடியுமா ? என் குறைந்த இசையறிவுக்கு எட்டிய வரையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் பாடல் சுபபந்துவராளி ராகத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு நாட்டுப் பாடல் ! இசை விற்பன்னர்கள் இதனைத் தெளிவு படுத்தலாம் ! மொத்தத்தில் மிக அருமையான இசை !
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பும், நடையும், பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஏற்றாற்போல் செய்யும் அங்க அசைவுகளும், சிறந்த நாட்டிய மேதை என்று பேர் பெற்றவர் கூட இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்குமோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கும் ! அத்தனை அருமை!
திரு டி.எம்.சவுந்திரராஜன் அல்லாது வேறு எவரேனும் இந்தப் பாடலைப் பாடியிருந்தால், மேற்சொன்ன இத்தனை பெருமைகளும் இல்லாமல் போயிருக்கும் என்பதே, அன்றும், இன்றும், என்றுமே மறுக்க முடியாத உண்மை !
அத்தனை கலைஞர்களுக்கும் எமது தலை தாழ்த்திய வணக்கங்கள் !
--கி.பாலாஜி
ஆகஸ்ட் 13 2018
Comments
Post a Comment