நிலாக் கால நினைவுகள் - 11

"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, 
 அமைதியுன் நெஞ்சில் நிலவட்டுமே"
----------------------------------------------------------------------------------------------------------




இன்று என் நினைவை அள்ளிக் கொண்டுபோன ஒரு பாடல் ! 
'ஆலயமணி' என்ற அற்புதமான படத்தில் வரும் ஒரு அழகான, அமைதியான பாடல். என்றும் என் மனத்துக்குகந்த பாடல் !  பட்டப்பா (என் மாமா) வேலை பார்த்து வந்த டி.ஐ.சைக்கிள் நிறுவனத்தார், மாதமொரு முறை அவர்களது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, அவர்களது அலுவலக வளாகத்தில், ஒரு படம் திரையிடுவது வழக்கம். அது ஒரு சனிக்கிழமை. அன்று காலை ஆபிஸ் கிளம்பும்போதே மாமா என்னையும் தம்பியையும் , மாலை அலுவலகத்தினருகில் வரும்படி சொல்லிவிட்டார், படம் பார்ப்பதற்காக ! அப்படிப் பார்த்த பல படங்களில் ஒன்றுதான் 'ஆலயமணி ' !  இன்னும் நினைவிலிருந்து அகலாத ஒரு படம். சினிமாவைத் தவிர போனஸாக, எங்களுக்கு ஆபிஸ் கேண்டினிலிருந்து பஜ்ஜி, காபி வேறு கிடைக்கும் . அதனால் நாங்கள் இங்கு படம் பார்ப்பதை மிகவும் விரும்புவோம்! ஆகா ! அந்த நினைவுகள்தான் எத்தனை இனிப்பானவை !

நிற்க, இந்தப் படத்தின் பாடல்களில் எனக்கு மிகவும் பாடல்களில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்ட பாடல்.   பாடலின் முதல் வரியைக் கேட்க ஆரம்பிக்கும்போதே தூக்கம் நம் கண்களைக் கண்டிப்பாகத் தழுவும். அதன் இசையும், ஜானகியம்மாவின் குரலும் அந்த அளவுக்கு நம்மை ஆட்கொள்ளும்.  இரட்டையர் விசுவநாதன் ராமமூர்த்தி அவர்களின் அற்புதமான இசை !  பாடலில் கிளாரினெட் மற்றும் அக்கார்டியனின் பங்கு பெருமளவு !  மனதை அப்படியே மயக்கிவிடுகிறது இசை !  

இப்பாடலில் நடிப்பு விஜயகுமாரி.  காதலன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் படுத்திருப்பார். அவரது மனதில் இருப்பது வேறொருத்தி. விஜயகுமாரி இதையறியாத நிலையில் பாடுகிறார் ! பாடலின் வரிகளுக்குத் தகுந்தாற்போன்ற அந்த முகபாவம் அசாத்தியம் !  'தூக்கம்' என்று சொல்லும்போது தூக்கமும், மயக்கம் என்று சொல்லும்போது மயக்கமும் அவரது முகத்தில் நிழலாடுவது மிகச் சிறப்பு !

கவியரசர் கண்ணதாசனின் வரிகளுக்குக் கேட்கவா வேண்டும் ? பின்னியெடுக்கிறார் !  அவனே தனக்கு அனைத்தும் என்று நினைத்திருக்கும் காதலி அவனது நிம்மதியை மட்டுமே விரும்புவாள் என்ற கருத்தை மிக அழகாகச் சொல்லியிருப்பார். இதோ பாருங்கள்: 
    
    "அந்த தூக்கமும், அமைதியும், நானானால், உன்னை, 
     தொடர்ந்திருப்பேன், என்றும், துணையிருப்பேன்"   

உனக்கு என்னால் அமைதி கிடைக்கும் என்று நீ நம்பினால் கடைசிவரை உன்னுடன் வாழத் தயார் என்கிறார் !  

     "காலையில் நான் ஓர், கனவு கண்டேன், அதை,
     கண்களில் இங்கே, எடுத்து வந்தேன், 
     எடுத்ததில் ஏதும், குறைந்து விடாமல், 
     கொடுத்து விட்டேன், உந்தன் கண்களிலே, கண்களிலே..,"

அதிகாலையில் அவனுடன் இருப்பதாகத் தான் கண்ட கனவின் உண்மையை அப்படியே கொண்டுவந்து அவன் கண்களுக்குள் செலுத்திவிட்டாளாம் ! என்ன ஒரு அழகான கற்பனை கவிஞனுக்கு, காதலின் மென்மை குறித்து !  ஒவ்வொரு இடத்திலும் ஜானகியம்மாவின் குரலில் இனிமையும் குழைவும் நம்மைக் கிறங்கடித்து விடுகிறது ! 

    "மனமென்னும் மாளிகை, திறந்திருக்க, 
     மையிட்ட கண்கள், சிவந்திருக்க, 
     இரு கரம் நீட்டி, திரு முகம் காட்டி, 
     தவழ்ந்து வந்தேன், நான், உன்னிடமே, 
     தவழ்ந்து வந்தேன், நான் உன்னிடமே.."

இத்தனை உருக்கமாகத் தன் காதலை வெளிப்படுத்தி இவள் பாடிக் கொண்டிருக்க, அடுத்த கண்ணியைத் தன காதலி பாடுவதாக எண்ணி மயங்கும் காதலன், மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டு, அப்படியே உறங்கிவிடுவான் !  இந்தக் காட்சியைக் காணும்போது நம் மனம் நோகும் என்பது மட்டும் உண்மை !  

--கி.பாலாஜி 
ஆகஸ்ட் 15  2018 

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......