நிலாக்கால நினைவுகள் - 15

"காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் -"


எனது நேற்றைய இரவுப்பாடல்களில் ஒன்று இதுவாக இருந்தது. மனம் மகிழ்ந்தது. வழக்கம் போல் மனம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்குப் பறந்து சென்றது. இதுவும் அம்பத்தூர் கிருஷ்ணா டென்ட் தான்! பள்ளிப்பாடங்களில் வருகின்ற சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த படம் என்பதால் பள்ளியில் சிறப்புச் சலுகை கொடுத்து இந்தப் படத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் செல்ல இயலவில்லை. நான்கு நாட்கள் கழித்து மாமா குழந்தைப் பட்டாளங்களைக் கூட்டிச்சென்று காண்பித்த படம் ! விஷயத்துக்கு வருவோம்!

'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் மகாகவி பாரதியார் எழுதிய வரிகள் இந்த மகத்தான காதல் கவிதை, சிந்தை மயக்கும் விந்தை புரிந்தது திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையிலும், பி.பி ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலா அவர்களின் தேனையொத்த தீங்குரலிலும் ! இதற்குப்பிறகு, இசையறிந்த ஒவ்வொருவரின் உதடுகளிலும், இந்தப்பாடல் புகுந்து புறப்படாமல் இருந்ததே இல்லை எனலாம் ! இந்த இசை மேலாகப் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் ! ஆனால் பாடிப்பார்க்கும்போதுதான் தெரியும் அதன் ஆழம் என்னவென்று ! அத்தகைய ஒரு பாடலை வெகு லாவகமாக அளாவியிருக்கிறார்கள் பாடகர்கள் ! உங்கள் சித்தத்தைக் குளிர வைக்க, சிந்தையை மகிழவைக்க , இதோ வருகிறது அந்தப்பாடல் , இசையாய் பொங்கும் இயற்றமிழாய் !


மகாகவி பாரதியாரின் இந்தப் பாடலை அறியாதவர்களே இருக்க முடியாது எனலாம். தன காதலியைப்பற்றிய கவினூறும் வரிகளைக் கவிதையாய் வடிக்கிறான் கவிஞன் ! மகாகவியின் கற்பனையே கற்பனை ! பாரதியின் இந்தப் பாடலில் கண்ணம்மா என்ற தன் காதலியைப் பற்றி வருணிக்கும் அழகைப் பாருங்கள் ! அருமையான காற்றின் சுகத்தை அனுபவிக்கும் நேரத்தில் அவனுள் என்றும் நிலைத்திருக்கும் காதலியின் நினைவும் அவளது அன்பும் முந்திக்கொண்டு வருகிறது ! அவளது காதலை எண்ணிக் களிக்கின்றானாம்! அமுதூற்றினையொத்தவை அவளது இதழ்கள் என்கிறான் ! விழிகளில் இருக்கும் குளிர்ச்சியைக் குறிப்பிடும் அழகைப் பாருங்கள் ! தண்ணிலவு அவளது விழிகளிலே ஊறித் ததும்பி வழிகிறதாம் ! நம்மைப் போன்றவர்கள் கண்ணின் அழகை மட்டும் சொல்லி விட்டுவிடுவோம் ! அவன் மகாகவி அல்லவா! அந்தக் கண்களின் தன்மையைப் பற்றி ஒரு வரியில் ஒரு காவியமே படைக்கிறான் ! அவள் மேனி பத்தரைமாற்றுத் தங்கமாம் ! இவையனைத்தும் இந்த வையத்தில் அவன் வாழும் காலம் வரை அவளைத் தவிர வேறெந்த நினைவும் கொள்ளாமலிருக்கச் செய்வது மட்டுமில்லை ! இந்த மண்ணுலகத்தானாகிய அவனை ஒரு விண்ணுலகைச் சேர்ந்தவனாகவே செய்து விடுகிறதாம் ! என்ன ஒரு கற்பனை பாருங்கள்! அடுத்த கண்ணியில் அவன் சொல்வதையெல்லாம் பாருங்கள் !

"நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே" - இதிலே ஒரு சிறப்பை கவனியுங்கள் ! எந்த அளவுக்கு அவன் பெண்மையை மதிக்கிறான் என்பது புரியும் ! பொன்னுக்கும் மேலாகப் பெண்ணை மதிக்கின்ற பொழுதில் துயர்கள் அனைத்தும் போய்விடுகின்றன என்கிறான் ! என்ன ஒரு கண்ணியமான காதல் ! விண்ணவனுக்கிணையாகிவிட்ட அவன் வாயினிலே அவள் பெயரைச் சொல்லும்போது , விண்ணோருக்கே உரித்தான அமிழ்தம் சுரக்கிறதாம் ! அவளே அவனது உயிர் என்கிறான்! அது மட்டுமில்லை . உயிராகிய தீயில் நிலைக்கின்ற ஜோதியே அவள்தான் என்கிறான் ! ஜீவாத்மாவின் சைதன்யம் அந்த ஜோதி என்ற தத்துவார்த்தமான செய்தி இங்கே பகிரப்படுகிறது என்பதையும் கவனியுங்கள் ! அவன் சித்தமும் சிந்தனையும் அந்த ஜோதியேதான் ! ஆஹா! என்ன ஒரு அருமையான பாடல் ! பாரதி என்னும் கடலில் குளித்து எடுத்த முத்துக்களில் ஒரு விலை மதிப்பற்ற முத்து இந்த நல்முத்து , எனலாம் !


கி.பாலாஜி
18 .09 .2018 


Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......