நிலாக்கால நினைவுகள் - 4
இளமை முதல் இசை !
https://www.youtube.com/watch?v=kMadL2V_SvY
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்' என்ற பாடல் இன்றைய வாட்சாப் பதிவாக சகோதரி லதா அனுப்பியிருந்தாள். 'அசோக் குமார்' படத்திற்காக, பாபநாசம் சிவன் அவர்கள் எழுதி, எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் பாடி நடித்த படம்/பாடல் ! நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு அற்புதமான பாடல். கேட்கையிலேயே மனம் பால்ய நினைவுகளில் மூழ்கிவிட்டது.
அத்தை மகன் ஸ்ரீதருக்கு 4 அல்லது 5 வயது இருக்கும் அப்போது ! எனக்கு எட்டு வயது. 'பட்டப்பா' என்று நாங்கள் அன்போடு அழைக்கும், அவனது தந்தையார் (எனது அத்திம்பேர் - அத்தையின் கணவர்) தினமும் எங்களனைவரையும் உறங்க வைக்கப் பாடும் பாடல்களில் ஒன்று 'பூமியில் மானிட ஜென்மம்' ! அருமையான குரல் அவருக்கு. இன்னும் அவரது குரல் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அவர் தினமும் பாடும் பாடல்களின் பட்டியலைக் கீழே தருகிறேன். சில பாடல்களை கேட்டிருப்பது கூட அபூர்வம்.
எனக்குள் இசையார்வத்தைத் தூண்டியவர்கள் - எனக்கு 7 வயதுவரை என் சித்தி சாரதா; அதற்கு மேல் அதனை வளர்த்தவர்கள் , எனது பள்ளியிறுதி வரை என் அத்தை சந்திரா, அத்திம்பேர் பட்டப்பா - கல்லுரிக் காலத்தில் சித்தப்பா நடராஜன். இசை மயமான அந்த கால கட்டங்களை என்னால் என்றும் மறக்க முடியாது. 'கருணாலயநிதியே தினமும் உன் சரணாம்புஜம் கதியே' என்ற ஹிந்தோள ராகப்பாடலைப் பாடித்தான், சாரதா சித்தி எனக்கு தோராயமாக ஒரு 5 அல்லது 6 வயது இருக்கும்போது முதன்முதலில் என் இசை உணர்ச்சியைத் தூண்டிவிட்டார். அதன் பிறகு நான் அம்பத்தூர் குப்தா ஸ்கூலில் சேர்க்கப்பட்ட காலம் ! மௌனஸ்வாமிகள் மடத்து வீட்டில் குடியிருந்த போது காலை நேரம் சமையல் பண்ணிக் கொண்டே சந்திரா அத்தை அடிக்கடி பாடிக் கொண்டிருந்த 'காற்றினிலே வரும் கீதம், ப்ருந்தாவனத்தில் கண்ணன் பிறந்த' போன்ற பாடல்கள் அத்தையின் குரலில் இன்னும் என் காதில் ரீங்கரிக்கின்றன !
பட்டப்பா பாடும் பாடல்களான, 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்', 'வேடிக்கையாகவே நானும் சுமந்த்ரனும் புறாவிட்டு விளையாடினோம்' என்ற விருத்தம் - சாரங்கதரா படத்திலிருந்து, 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி' ஸத்வகுணபோதன், ஆலோலம் ஆலோலம், வேடிக்கையாகவே வெடிச்சாலே, உன்கண் உன்னை ஏமாற்றினால், பழம் நீயப்பா, பட்டணந்தான் போகலாமடி, நாட்டியக்குதிர நாட்டியக்குதிர, தீனகருணாகரனே, நந்தனார் படப்பாடல்களில் சில (நாற்பது வேலி நடவு, சற்றே விலகியிரும் பிள்ளாய், என்னப்பனல்லவா, போன்றவை - கதாகாலக்ஷேபத்துடன்), மற்ற கதாகாலக்ஷேபங்களான ப்ரஹல்லாத சரித்திரம், சக்குபாய் கதை, திருநீலகண்டர், சிசுபாலன் வதம், ஸ்ரீக்ருஷ்ண ஜனனம், ஆதிசங்கரர், இது போன்ற பல.......எண்ணிலடங்காத இன்னிசைக் கோலங்கள் என் நெஞ்சை நிறைக்கின்றன ! லதா பதிவிடும் பல பாடல்கள் என் நெஞ்சத்திரை நட்சத்திரங்களை ஒளிவிடச் செய்கின்றன ! லதாவுக்கு நன்றி !
Comments
Post a Comment