நிலாக் கால நினைவுகள் - 8

' மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் '




சகோதரி லதாவின்  இன்றைய தேர்வு  மேற்கண்ட பாடல் !  கேட்கும்போதே மனம் பறக்கிறது பின்னோக்கி ! நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். அம்பத்தூர் 'கிருஷ்ணா' கீற்றுக் கொட்டகையில் பார்த்த படம்.  அந்த மைதானமும், நடுவில் கொட்டகையும், மாட்டு  வண்டியில் படத்தின் விளம்பர ஓசையும், காட்சிகளாகக் கண்முன்னே விரிகின்றன ! 


மறக்க முடியாத வெற்றிப் படமான பாசமலர் படத்தின் ஒரு அருமையான பாடல்  . அந்தக் காலத்தில் ஒரு வெற்றி பெற்ற படமானால் அத்தனை பாடல்களும்  நன்றாகவே  இருக்கும்.  நடிப்பைச் சொல்வதா, கதையைச் சொல்வதா, இசையைச் சொல்வதா ,  இன்முக நடிகர் தேர்வைச்சொல்வதா, வசனத்தைச் சொல்வதா ,  பாடல் வரிகளைச் சொல்வதா, இயக்கத்தைச் சொல்வதா, இன்னொளிப் பதிவின் தரத்தைச் சொல்வதா .......ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்ட அக்காலத்திய திரைப் படங்கள் மகத்தான திரைக் காவியங்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை ! மேற்கூறிய இத்தனை விஷயங்களும் இந்த ஒரு பாடலிலேயே அடங்கிவிடும் என்று சொன்னால் மிகையாகாது. இசையும் வரிகளும் இயல்பாக ஒளிரும் !  தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மிகவும் அருகியிருந்த அந்தக் கால கட்டத்தில் ஒவ்வொரு படத்தின் வெளியீடும் ஒரு சாதனைதான் ! தரமான படங்களைத் தரவேண்டும் என்பதில், சம்பந்தப் பட்ட அனைவருமே ஒத்த கருத்தை உடையவர்களாயிருந்தனர். இந்த ஒரு பாடலையே எடுத்துக் கொள்ளுங்களேன் ! கவியரசர் கண்ணதாசனின் வரிகளும் மெல்லிசை மன்னர்களின் இசையின் தரமும் ......ஆஹா! எத்தனை புகழ்ந்தாலும் போதாது.  தங்கையின் நல்வாழ்வுக்காகத் தன்னையே தரவிருக்கும் அண்ணனின் கற்பனைகளும் லட்சியங்களும் எத்தனை அழகாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன ! அவளது திருமணம்  அண்ணனின் மனக்கற்பனையில் என்ன ஒரு அழகான காட்சி ! தங்கையின் காதலும், திருமணமும், மகப்பேறும்...அவளது வாழ்க்கை மொத்தமுமே ஒரு சரித்திரமாக இந்தப் பாடல் வரிகளில் வெளிவந்து விடும். கவியரசரின் வரிகளே வரிகள் ! 

ஒரு மலரைப்போல் உறங்குகிறாளாம் தங்கை ! அவள்மேல் கொண்ட அன்பின் அடையாளம் அந்த மென்மையான மலர். அண்ணன்மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை அவளது அமைதி !  இதன் அடிப்படையில் பாடல் முழுவதையும் கொண்டு செல்கிறார் கவியரசர்.  அடுத்து திருமணக் காட்சி. 'மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை' என்ற வரிகளில் அவளது மகிழ்ச்சியின் வெளிப்பாடு ;  'மணமகன் வந்துநின்று  மாலை சூடக் கண்டான்'  என்பதில் அண்ணன் கொண்ட லட்சியத்தின் வெற்றி ;  'ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்' - இந்த வரிகளைக் கவனியுங்கள் . கதையின்படி அவள் ஒருவன் பால் காதல் கொண்டிருந்ததை எத்தனை மென்மையாகவும் அழகாகவும் கூறுகின்றன இந்த வரிகள் ! கவியரசருக்கே இது இயலும் ! அவள் அன்புடன் கால்களில் பணிந்திட, இவன் கண்களில் வான்மழை போல் பெருகுகிறதாம் ஆனந்தக் கண்ணீர் !  அடுத்து, அவள் மணமுடிந்தபின் தாய்மையுறுவதையும் அவன் கற்பனையில் காணும் காட்சியில் , பாடல்  வரிகளைப் பாருங்கள் ! "பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்' - எத்தனை அழகாக , நாசூக்காகச் சொல்கிறார் பாருங்கள் !  

மெல்லிசை மன்னர்கள் இசையைப் பற்றி சொல்ல வார்த்தைகளே கிடைக்கவில்லைதான் ! அண்ணன் கனவு காணும் திருமணக் காட்சியின் அமைப்பும், அந்த மண்டபமும், மலர் மாலைகளும், மேளங்களும் நம் மனதில் என்றும் பெறவியலாத ஒரு நிறைவைத் தருகின்றன என்பதில் ஐயமே இல்லை ! எத்தனை வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே போகலாம்தான் ! என்றும் மறக்கவியலா கானங்கள் என்னை இன்றும் கட்டிப் போடுகின்றன !

--கி.பாலாஜி 
ஜூலை 29  2018 

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 10

நிலாக் கால நினைவுகள் - 13

எண்ணத்திலே ஓசைகள்.......