நிலாக்கால நினைவுகள் - 7
பார்த்த ஞாபகம் இல்லையோ !
இன்று சகோதரி லதா Latha Rajaraman எனக்கு அனுப்பியிருந்த பாடல் புதிய பறவை படத்திலிருந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ' ! அருமையான ஒன்று ! சேலம் கல்பனா திரையரங்கில் 70 களில் பார்த்த படம் ! இளமைக்கால நினைவுகள் தரும் சுகமே தனி. (கல்பனா திரையரங்கு இன்று இல்லை ! எல்லா பழைய கட்டிடங்களையும் போல புதிய 'மால்'கள் உருவாக இடம் கொடுத்து விட்டு அழிந்து மறைந்து விட்டது, என் நினைவுகளின் புகலிடமாக இருந்த அந்த இடம்!) அத்தையிடம் எதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு கிளம்பிப் போய் பார்த்த பல படங்களில் ஒன்று. அத்தைக்குப் புரியாதா என்ன !! நிற்க, பாடலுக்கு வருவோம் ! மெல்லிசை மன்னர்களின் அதியற்புதமான பாடல்களில் ஒன்று 'பார்த்த ஞாபகம் இல்லையோ' . இந்தப் படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களுமே முத்தான பாடல்கள்தான் ! எனினும் இது எனது மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆங்கிலேயர்களின் பாப் இசையை அழகாகக் கலந்து கொடுத்திருப்பர் மன்னர்கள். இசையரசி சுசீலா அம்மா அற்புதமாகப் பாடியிருப்பார். பின்னணி இசை கேட்கவே வேண்டாம்.! கவியரசரின் அற்புத வரிகளையும், நடிகர் திலகம் மற்றும் சவுகார் ஜானகி ஆகியோரது நடிப்பையும் மறந்து விடவா முடியும் ? அன்றும், இன்றும், என்றும் இசை ரசிகர்கள் அனைவரின் மனதையும் நிறைக்கும் இந்த அருமையானபாடலின் காணொளியை இங்கே காணலாம் !
A beautiful review for the film by The Hindu dated June 26 2009 is also attached for viewers to know:
--K.Balaji
July 28 2018
Comments
Post a Comment