'ரீ யூனியன்' நினைவுகள்
ரீ யூனியன் நினைவுகள்
மொபைல் போன் அடித்து ஓய்ந்தது. அவன், அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்தான், ஏதோ யோசனையில் மூழ்கியவாறு ! ! சிந்தனை எங்கோ பறந்து கொண்டிருந்தது. திரும்பவும் போன் அடித்தது. மனைவி ஓடிவந்து “போன் அடிக்கிறது பாருங்கள் . ஹியரிங் எய்ட் ஒண்ணு வாங்கிக் கொடுத்திருக்கான் மாப்பிள்ளை அதை மாட்டிக்கறதே இல்லை” என்று அங்கலாய்த்தாள். போனை எடுத்து நீட்டினாள். உடனேயே இயர் போனை எடுத்து மாட்டிக் கொண்டவன் பேசத்தொடங்கினான்.
“ஹலோ யார் பேசறது?”
“ஹலோ, யாரு பாலாஜியா? என் குரல்புரியறதா?”
“ரொம்பப் பரிச்சயமான குரல்தான்! ஒரு நிமிஷம்……அடேய்! கிருஷ்ணமூர்த்தியா?”
“ எப்படி கண்டுபிடிச்ச? நாம் பார்த்தோ பேசியோ குறஞ்சது நாற்பது வருஷமாவது ஆகியிருக்குமே!”
"ஆமாம்! அந்தக் காலத்து ஆர்மோனியப் பொட்டி மாதிரி எட்டுக் கட்டை குரல் வேறு யாருக்கு வரும்? பழகிப்போன குரல்! உடனே கண்டுபிடிச்சிட்டேன் . அது சரி! நீ எப்படி இருக்க? எத்தனை வருஷம் ஆச்சு? எங்க இருக்க? என்ன செய்ற? என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?"
"எல்லாம் விவரமா சொல்றேன்டா ! அவசரப்படாதே! மெட்ராஸ்ல நீ வேல பார்த்த கம்பெனியில என் பிரண்டு ஒருத்தன் இருக்கான். அவன் மூலமா, பெங்களூர் பிரான்ச் ரிட்டயர்ட் ஸ்டாப் பாலாஜியோட நம்பர் வேணும்னு கேட்டேன் . எப்படியோ வாங்கி கொடுத்துட்டான். நீ இப்போ பெங்களூர்ல தானே இருக்க? நான் அடுத்த வாரம் அங்க வர சான்ஸ் இருக்கு. உன்ன வந்து பார்க்கிறேன். ஒரு முக்கியமான செய்தி சொல்லணும்"
"ஏன்டா முக்கியமான செய்திங்கற? ஏன் ஒரு வாரம் வெயிட் பண்ணனும் ? எனக்கு தூக்கமே வராது . இப்பவே சொல்லித் தொலை"
"அது ஒண்ணும் இல்லடா ! நம்ம ஆறாம் கிளாஸ்ல இருந்து எஸ்எஸ்எல்சி வரை ஒண்ணா படிச்ச எல்லாரையும் ஒன்று சேர்க்கிற ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதுல உன் நம்பரையும் சேர்த்து விடுறேன் . அடுத்த மாசம் எல்லோருமே மீட் பண்ற ப்ரோக்ராம் ஒன்னு இருக்கு! நீ கட்டாயம் கலந்துக்கணும்"
"ஆஹா ! ரொம்ப பிரமாதம். கண்டிப்பா மீட் பண்ணுவோம். ப்ரோக்ராம் மட்டும் பெங்களூரில் வச்சுக்கப் பாருங்கடா"
"ஆமாம்! பெங்களூர்ல தான் . அதனால தான் உன் பேர் உடனே ஞாபகம் வந்தது. நம்மளோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் நிறையபேர் அங்க தான் இருக்காங்க"
"ரொம்ப சந்தோஷம் . ரொம்ப ஈகரா இருக்கு எல்லாரையும் பாக்குறதுக்கு! டேய்! நம்ம வைத்தியும் சந்தானமும் கூட வருவாங்க இல்லையா ? நாம நாலு பேரும் எப்பவுமே ஒரு செட் ! எஸ்எஸ்எல்சி எக்ஸாம் முடிஞ்சதும் நாம நாலு பேரும் எடுத்துண்ட போட்டோ கூட இன்னும் நான் வச்சிருக்கேன்"
"கண்டிப்பா வருவாங்கடா ! வாட்ஸ்அப் குரூப்பில் இருக்காங்க பாரு ! சரி, எல்லாத்தையும் இப்பவே பேசிட்டா நேர்ல பேச விஷயமே இருக்காது! நான் அடுத்த வாரம் உன்ன மீட் பண்றேன்"
"விஷயம் இருக்காதாவது ! இந்த ஒரு வாரம் என் நினைவுகளுக்கு நல்ல தீனி தான்! சரி அடுத்த வாரம் பார்ப்போம்"
உரையாடல் முடியும் வரை அங்கேயே இருந்து கவனித்துக்கொண்டிருந்த மகள் சௌமியா தன் அம்மாவிடம் "அப்பாவின் முகத்தில் என்ன ஒரு மலர்ச்சி பாருமா இப்போ ! எல்லாம் பழைய நினைவுகள் கொடுக்கிற மகிழ்ச்சி தான்" என்றாள்.
"கண்டிப்பா! பழைய நினைவுகளைப் புரட்டிப் பாக்குறதும் பழைய மனுஷங்கள மீட் பண்றதும் சாமானிய விஷயமா என்ன" என்றாள் மனைவி ! அவர்களது சம்பாஷணையில் நானும் சேர்ந்து கொண்டேன்.
"இனிமே கொஞ்சநாளைக்கு இதிலேயே டைம் போயிடும் உங்க அப்பாவுக்கு! நல்ல காலம் . எனக்கு இவரோட பேச்சுத் தொல்லையிலிருந்து கொஞ்சம் விடுதலை" என்றாள் மனைவி . நான் முறைத்துக் கொண்டே அங்கிருந்து அகன்றேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி இருக்கும். போன் அடித்தது. நல்லவேளையாக காதில் கேட்டது. இயர் போனை மாட்டிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தியின் காலை அட்டென்ட் பண்ணினேன் நான் . " பாலாஜி! இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன். வென்யூ டீடெயில்ஸ் எல்லாம் தரேன்"
"வாடா, இங்கேயே டிபன் சாப்பிடலாம்".
பேசி முடித்து போனை வைப்பதற்குள் மனைவி “டிபன் உப்புமா தானே" என்று முறைத்தாள். திடுதிப்பென்று யாருக்கேனும் சாப்பாடு என்றால் அவளுக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது ! பாவம்! அவளுக்கும் வயதாகிறது . 65 தாண்டியாச்சு. எங்க ரெண்டு பேருக்கும் மூணு வருஷம் தான் வித்தியாசம்.
"சரி சரி கொஞ்சமா உப்புமாவே பண்ணிடு" என்றேன். எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் என்பதும் ஒரு காரணம் . அவளுக்கு அத்தனை பிடிக்காது தான்! ஆனா ஒரு நாலு பேருக்கு பண்ணனும்னா உப்புமாதான் சரி !
சற்று நேரத்தில் மூர்த்தி வந்தான் ; கூடவே அவன் மனைவியும்! அது ஆச்சரியம் தான் . அவன் சொல்லவே இல்லை. வரவேற்று உள்ளே உட்கார வைத்தோம். என் மனைவி உள்ளிருந்து வந்ததும் அறிமுகப்படலம் முடிந்தது. மூர்த்தியின் மனைவி கல்யாணி உள்ளே சென்றாள். மிகவும் கலகலப்பான சுபாவம் உள்ளவள் போல் தெரிந்தாள். உள்ளேயிருந்து கேட்ட அரட்டை சத்தத்தில் அது புரிந்தது. இங்கே நாங்கள் பேச தொடங்கினோம். 50 வருடத்திய கதைகள் உண்டே !
"மூர்த்தி ! 67 மார்ச்சில் நாம எடுத்துண்ட போட்டோ என்கிட்ட இருக்கு . இதுக்கு முன்னாடி ஒரு நாற்பது வருஷம் முன்ன, நீ என்னப் பாக்க ஒரு முறை வந்திருந்த! அப்போ நான் அல்சூர்ல இருந்தேன். உனக்கு ஞாபகம் இருக்கோ?"
"ஆமாமாம்! அப்போ உங்க அப்பா அம்மாவைக் கூட பார்த்து ஞாபகம் இருக்கு"
"அதுசரி இந்த மீட்டுக்கு யார் யாரெல்லாம் வரப்போறாங்க? வென்யூ எங்க? எல்லா விவரமும் சொல்லு"
"சொல்றேன் . அதுக்குத்தான வந்திருக்கேன் . இந்த ஏரியாவிலேயே 'டாமரிண்ட்'ன்னு ஒரு ரிசார்ட் மாதிரி இருக்கே ! அங்க தான் ஏற்பாடு பண்ணி இருக்கு . ஆளுக்கு 500 ரூபாய் போட்டு எல்லா செலவையும் மீட் பண்ணலாம். லஞ்ச் அங்கதான் . லஞ்சுக்கு அப்புறம் மீட்டிங். நாமெல்லாம் செல்ப் இன்ட்ரொடக்ஷன் பண்ணிக்குவோம். ஈவினிங் வரைக்கும் பேசிட்டு இருக்கலாம். ஈவினிங் ஒரு சின்ன டான்ஸ் ப்ரோக்ராம் வித் ஹை டீ ! அதுக்கப்புறம் எல்லாரும் பிரிகிறோம், அடிக்கடி பாத்துக்குவோம் அப்படிங்கற உத்தரவாதத்தோட! அவ்வளவுதான்"
"நினைக்கும்போது எவ்வளவு உற்சாகமா இருக்கு ! ஏண்டா, ஹேமா நீலா, பாலா எல்லாரும் உண்டா?"
"டேய் டேய் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் நீ மாறவே இல்லையே!"
"அப்படி எல்லாம் இல்லைடா ஸ்கூல் நினைப்புதான்! ஸ்கூல் முடிஞ்சப்புறம் யாரு எங்க மீட் பண்ணினோம்?"
"அது சரி யார் யார் வராங்கன்னு நீதான் பாக்கப் போறியே!"
சற்று நேரத்தில் உப்புமா காபி வந்தது . அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். கடந்த காலங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் பகிர்ந்து கொண்ட நிகழ்வு மகிழ்ச்சிகரமாக இருந்தது.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு நினைவுகள் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு ஆட்சி செலுத்த தொடங்கின! மனதில் என்றும் அவைகளின் கொட்டம்தான் !
அது கோ-எஜுகேஷன் பள்ளிக்கூடம்தான் ! இருப்பினும் ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியாகத்தான் வகுப்புகள் இயங்கும். பத்தாம் வகுப்பு வந்தபோது ஸெலக்டிவ் எடுக்க வேண்டிய காரணத்தால் என் வகுப்பில் ஏழு பெண்களும் இருந்தனர். அவர்கள் ஒதுக்குப் புறமாகத்தான் உட்காருவார்கள். பையன்களின் பெஞ்சுகள் ஒன்றும் பக்கத்தில் இருக்காது. என் வகுப்பில் பிஞ்சிலே பழுத்த ஞானிகளாக சில வயதான பையன்கள் உண்டு. அதே வகுப்பில் இரண்டும் மூன்றும் ஆண்டுகளாக பெஞ்சு தேய்ப்பவர்கள். அவர்களிடம் மற்றப் பையன்களே சற்று பயப்படுவார்கள் என்றால் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பெண்களில் ஹேமா சற்று அழகாயிருப்பாள். பாலா கொஞ்சம் சாது. நீலா வாயாடி என்று பெயரெடுத்தவள். கணக்கு வாத்தியார் சுப்பிரமணியன். கொஞ்சம் குசும்புதான் அவருக்கு. வகுப்பில் கேள்வியைக் கேட்டுவிட்டு பெண்கள் பக்கம் பார்த்து 'பாலாஆஆஆ' …என்று இழுத்துவிட்டு உடனே என் பக்கம் பார்த்து, 'ஜி' என்பார். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கும். நான் வெகுளியும் சாதுவுமானதால் வகுப்பில் பெரிய பையன்களும் அதே போல் கூப்பிட்டு கேலி செய்வது வாடிக்கை ஆகிவிட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண் வீட்டில் சொல்லிவிட, பள்ளியில் செல்வாக்கு உள்ள அவள் தகப்பனார் தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்து விட்டார். தொடங்கி வைத்தவர் கணக்காசிரியர் என்பதால் அவரை தலைமையாசிரியர் எச்சரிக்கை செய்தார். வகுப்பில் கேலி செய்த பையன்களுக்கு ஒரு வாரம் 'ஸஸ்பென்ஷன்'.
பதினோராம் வகுப்பில் பள்ளி இறுதிநாள் விழா நடந்தது மறக்கமுடியாது. அன்று ஆண் பெண் பேதமின்றி அனைவரும் பேசிக்கொண்டு விடை பெறும் போது சில கண்கள் கலங்கின. ஒரு பையன் பெண்ணின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பது கூடக் குற்றமாகக் கருதப்பட்ட காலம் அது !. ‘பசுமை நிறைந்த நினைவுகளே' பாடலை ஹேமா, வெங்கட் இருவரும் மேடையில் நன்றாகப் பாடினார்கள். மூர்த்தி மௌத் ஆர்கனில் 'ஓஹோ எந்தன் பேபி' பாடலை வாசித்தான். எல்லோரும் கை தட்டினர்.
ரீயூனியன் நாளும் பள்ளியிறுதி நாள் நிகழ்வைத்தான் நினைவுபடுத்தியது. நான் முதலிலேயே ஆஜராகிவிட்டேன். முதலில் பார்த்தது வெங்கட் தான்! இன்றும் அப்படியேதான் இருக்கிறான். முகத்தில் மூக்குக் கண்ணாடி ஒன்றுதான் அதிகம்! பின்னாலேயே வந்தனர் ஈஸ்வர், அருணாசலம் இருவரும். என்னை அடையாளம் கண்டுபிடித்து மிகவும் மகிழ்ந்தார்கள். அந்தக் காலத்தில் அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களை இருவரும் குசகுசுவென்று பேசிக் கொள்வார்கள். நான் ஆவலுடன் அருகே சென்றதும் நிறுத்தி விடுவார்கள். “டேய், நீ இன்னும் வயசுக்கு வரலைடா ! போ அந்தப் பக்கம்' என்று விரட்டி விடுவார்கள். நான் எப்போதும் உயிர் நண்பன் உதயகுமாருடன்தான் இருப்பேன். தறி கிளாஸ் நடக்கும் போது தக்ளி நூற்றுக்கொண்டே அவன் சொல்லும் சினிமா கதைகள் இன்றும் மறக்க முடியாது. சினிமாவில் வருவது போலவே காட்சிப்படுத்திச் சொல்லுவான். அதே போல்,“ஸ்போர்டஸ் டே”யும் மறக்க முடியாது. வீட்டில் அத்தையின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வந்து விடுவேன். ஏனென்றால் அன்று உதயகுமாரிடம் சினிமா கதை பேச அதிக நேரம் கிடைக்கும். எனக்கு எந்த ஸ்போர்ட்ஸிலும் விருப்பம் கிடையாது. ஆனாலும் வந்து விடுவேன். அன்று மாணவர்கள் ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் ஓடும் போது எம்.ஜி.ஆர் படப் பாடல்களை எல்லாம் வைப்பார்கள். காது குளிரக் கேட்பேன். எம் ஜி ஆர் படங்களுக்கெல்லாம் கூட்டிச் செல்ல மாட்டார்கள் வீட்டில்! வெறும் புராணப் படங்கள் தான்! அதனால்தான் எனக்கு உதயகுமார் சொல்லும் எம் ஜி ஆர் படக்கதைகள், ஸ்போர்ட்ஸ் டே அன்று வைக்கும் பாடல்கள் எல்லாம் உயிர் ! ‘கட்டித் தங்கம் வெட்டியெடுத்து' , காவேரிக் கரையிருக்கு திருமணமாம் திருமணமாம், வாங்க வாங்க கோபாலையா, செவ்வாது மேடையிட்டு போன்ற பாடல்களெல்லாம் விளையாட்டு மைதானத்தின் பின்னிலையில் இன்றும் காட்சிகளாக என்கண் முன்னே ஓடுகின்றன. ஸ்போர்ட்ஸ் டேயின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன சொல்லுங்க பாப்போம்!....... தினமும் யூனிபார்மில் வர பொண்ணுங்க எல்லாம் அன்னிக்கு கலர் பாவாடை தாவணில வருவாங்க! அந்த வயசுக்கே உரிய சின்னச் சின்ன ஆசைகள் தானே இதெல்லாம் !
இப்படி என் நினைவுகளைக் கட்டிப்போட்ட அத்தனை சிறுவர் சிறுமிகளும் இன்று பெரிய குடும்பஸ்தர்களாக வந்தார்கள் ! அதோ உதயகுமார் கூட வந்துவிட்டான். ஓடிவந்து கை குலுக்கி கட்டியணைத்துக் கொண்டான்.
வணக்கம், விலகியிரு போன்ற கொரோனா மொழிகளெல்லாம் இங்கே செல்லுபடியாகாது! இந்த ரீயூனியனின் ஹை லைட், ஆசிரியர்கள் சிலரையும் முதுமைக் கோலத்தில் பார்க்க முடிந்ததுதான் ! கலாநிதி வாத்தியார் எங்களுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகத் தமிழ் வகுப்பு எடுத்தவர். மறக்கமுடியாத மனிதர்! அதே ஒயிட் அண்ட் ஒயிட்லதான் இன்னிக்கும் வந்திருந்தார். அவர் வகுப்பில் அத்தனை ஜாலியாக இருக்கும். சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் இடையிலேயே சிந்தனையைப் புகுத்தும் கலை அவருக்குக் கை வந்த கலை! இன்னும், ஸயன்ஸ் எடுத்த சூடாமணி டீச்சர், இங்கிலீஷ் அருணாசலம் ஸார் , காரப்பெண்டரி சுந்தரம் வாத்தியார், ராதாகிருஷ்ணன் ஸார், இவங்களையெல்லாம் ஒண்ணாப் பார்க்க முடிஞ்சது ஒரு பெரிய பாக்யம்னுதான் சொல்லணும்.
நான் இருக்கற இடம் பெங்களூருன்றதே மறந்து போச்சு ! அப்படியே அம்பத்தூர் ராமசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி மைதானத்துலதான் நான் நின்னுகிட்டிருந்தேன். புதிய உலகத்தில் இருந்து என்னை பழைய நண்பர்கள் சந்தானமும் வைத்தியநாதனும் வந்து தட்டியெழுப்பினர். கட்டிப் பிடித்தனர். நான் நனவுலகிற்கு வந்தேன் ! அவர்களிருவரையும் கண்டவுடனே 1967 இல் நாங்கள் எல்லோரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினேன் .
இப்படியாக, பலரையும் பார்த்து எல்லோரும் நினைவுகளைப் பரிமாறிக் கொண்டோம். நேரம் போனதே தெரியவில்லை. வீட்டுக்கு வரும்போது இரவு பத்து மணி.
ஆயிற்று! திரும்பவும் பழையபடி புத்தகங்கள் படிப்பது, பாட்டுக் கேட்பது, என்று வாழ்க்கை தொடரும் !
கி.பாலாஜி
10.06.2020
Super.
ReplyDeleteபசுமை நிறைந்த நினைவுகள் ரசிக்க வைக்கிறது. நினைவு ஆற்றில் உருண்டு உருண்டு அந்த கூழாங்கற்கள் பளபளக்கிறது. எடுத்து கண்ணில் ஒத்தி கொள்ளும் அழகும் மினுமினுப்புமாய் நினைவுகள் ரசிக்க வைக்கிறது. அனைவரும் சந்திக்கலாமா என்ற கேள்வியில் தொடங்கும் உற்சாக அலை எந்த இடத்திலும் அதன் அளவு குறையவே இல்லை. அதே உயரத்திலேயே நின்று கொண்டிருந்தது. அந்த அலைகளின் நுரைகள் இந்தப் பதிவு முழுவதும் படர்ந்து மனதின் கால்களை அழகாய் சூழ்ந்து கொள்கிறது! பள்ளிக்கால ஞாபகங்களில் அவரவர் காலங்களையும் இணைக்கிறது! அந்த வகுப்பறைகள். அரட்டை அரங்கங்கள். அந்த ஸ்போர்ட்ஸ் ஸ்டே என நிகழ்வுகள் சில நிமிடம் எங்களையும் அப்படியே இழுத்துப் பிடித்து நிறுத்தி விடுகிறது. அங்கே இருந்த நட்பூக்களின் வாசனை நெகிழ்வுடன் இதயம் நிறைந்து போனது! காலத்தால் மட்டும் நல்ல நட்பின் நிறத்தை மாற்ற முடிந்ததில்லை. அன்பால் கட்டமைக்கப்படும் அத்தனை விஷயங்களுக்கும் அந்த மார்கண்டேயத் தன்மை இருக்கவே செய்கிறது. உங்களின் ரீயூனியன் நாளில் எங்களையும் அழைத்துப் போகிறது உங்கள் எழுத்து! உங்கள் ஆசிரியர்களையும் நண்பர்களையும் அழகாய் அறிமுகப்படுத்துகிறது. அவர்களுடன் கைகுலுக்க வைக்கிறது.! என்னைப் பொறுத்தவரை எல்லாக் காலமும் அழகானதுதான். கடந்த பிறகே அதன் அருமை தெரிகிறது. அதை இன்னும் ஒருமுறை அழுத்தமாய் சொல்கிறது உங்களின் இந்தப்பதிவு.! சூப்பர்ப்பா! நிறைய எழுதுங்கள். நல்வாழ்த்துகள்!
ReplyDelete