நிலாக்கால நினைவுகள்- 17
நிலாக்கால நினைவுகள் - 17
"கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா" - மயக்க வைக்கும் வரிகள் !
ஏதோ பார்த்துப் பார்த்துச் சலித்த ஒரு ஸீரியலையே திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அது முடிந்த அடுத்த கணம் காணக்கிடைத்த அருமையான பாடல் காட்சி இது! இவை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கும? சலிக்குமா? கவியரசரின் வைர வரிகள்! முத்துச் சலங்கை முன்வந்து கொஞ்சும் கிளி எனப் பொழியும் திரையிசைத் திலகம் கே.வி.எம்.மின் இசை , அட்டகாசமான அடாணா ராகத்தில் ! அந்த ராகத்தின் கம்பீரத்தைப் பதம் பார்க்கும் திறனுள்ள ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ்.ஸின் கணீரென்ற குரல் ! அனைத்துக்கும் இணை சேர்க்கும் சிம்மக்குரலோன் சிவாஜியின் அபார நடிப்பு ! இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்றைய மாலைப் பொழுதை மேலும் அழகாக்கின.
மனம் எங்கோ கடந்த காலத்துக்கு பறந்து பறந்து சென்றது, ஏறக்குறைய 455 வருடங்கள் பின்னோக்கி! பள்ளிக்காலத்தில் கொட்டகையில் பார்த்த பல படங்களில் ஒன்று மகாகவி காளிதாஸ் நான் காண ஆசைப்பட்ட எல்லா படங்களுக்கும் கூட்டி செல்வார் , தன் மக்களையும் விட என்னிடத்தில் அதிகம் பாசம் வைத்திருந்த என் மாமா. நான் வளர்ந்தது அத்தை வீட்டில் தான்!
கழிந்து விட்ட காலங்கள் இன்று எத்தனை வேண்டினாலும் திரும்ப வராது என்பது எத்தனை உண்மையோ, அதை விடவும் பன்மடங்கு உண்மை நினைவுகளுக்கு அவற்றை மீட்டுத்தரும் சக்தி உண்டு என்பதுவும்! நினைவுப் பறவையின் மேலே அமர்ந்து சஞ்சரிக்கத் தொடங்கினேன் !
மாமா அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் அந்த ஆறு மணிக்குள் நாங்கள் அனைவரும் ரெடியாகி நிற்போம் . "சினிமாவுக்குக் கூட்டிட்டு போயி குழந்தைகள் படிப்பைப் பாழாக்கிற ஒரு அப்பாவை இந்த வீட்டில் தான் பார்க்க முடியும்" என்று பொறுமும் அத்தையை சமாதானப்படுத்தி விட்டு, அவசரமாக அவள் தரும் காப்பியையும் குடித்துவிட்டு, குழந்தைகள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டு விடுவார் மாமா ! அந்தக் காலகட்டத்தில் நாங்கள் பார்த்த பெருவாரியான படங்கள் புராணப் படங்கள்தாம். அனைத்தும் முத்தான படங்கள். அப்படிப் பார்த்து அனுபவித்த ஒரு படம்தான் இந்த 'மகாகவி காளிதாஸ்' எல்லாப் படங்களின் கதைகளும் எங்களுக்கு முன்னமேயே தினப்படி ராத்திரி கதை வகுப்பில் சொல்லிக் கொடுத்திருப்பார் மாமா.
நினைவுகளுக்கு இனிப்பு கலந்து நேரத்தை இனிமேலும் நினைக்கச் செய்தது இந்த பாடல் !
"யார் தருவார் இந்த அரியாசனம் புவியரசோடு
எனக்கும் ஓர் சரியாசனம்"
Comments
Post a Comment