எண்ணத்திலே ஓசைகள்.......
எண்ணத்திலே ஓசைகள்.....
வருடம் 1968. ஒரு தொலைவான இடத்திற்கான, என் முதல் ரயில் பயணம் அம்மாவுடன்செய்தது என்றால், அது குடியாத்தத்திற்குதான் ! 17 வயதில் அம்மாவையும் கூட்டிக்கொண்டு நான் பயணம் புறப்பட்டது வீட்டில் அத்தை, சித்தப்பா, தாத்தா அனைவருக்கும் சற்று கலவரமாகவே இருந்தது. உலகம் தெரியாமல் குழந்தைகளை வளர்த்து விடுவது அந்தக் காலம். அப்படித்தான் ஒன்றுமறியாத சிறு பையனாக 18 வயது வரை வளர்ந்தேன் நான் ! மிகுந்த பயத்துடன் தான் என்னை அனுப்பி வைத்தார்கள் . அம்மாவை அங்கு, மாமா வீட்டில் விட்டுவிட்டு தனியாக திரும்ப சென்னை வரவேண்டுமே என்ற கவலை!
நான் அங்கு கழித்த அந்த நான்கு நாட்களும் மறக்க முடியாதவை. என்னை நான் மிகவும் சுதந்திரமான மனிதனாக உணர்ந்தேன் . சென்னை வெயிலோடு வித்தியாசப்படுத்திப் பார்த்தோமானால், அது ஒரு குளிர் பிரதேசமாக தான் இருந்தது அப்போது ! கிராமம் என்றும் சொல்ல முடியாது, நகரம் என்றும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடம். காலை எழுந்து காபி குடித்தவுடன் வீட்டைச் சுற்றியிருந்த தெருக்களை எல்லாம் ஒரு வலம் வருவது வழக்கமாயிருந்தது. அத்தனை வீட்டு திண்ணையிலும் பெண்களும் குழந்தைகளும் அமர்ந்துகொண்டு தீக்குச்சிகள் தயாரித்துக் கொண்டு இருப்பார்கள். அது அவ்விடத்தின் குடிசைத் தொழிலாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நகர வாசியான எனக்கு, அது காண்பதற்கு ஒரு புதுமையான நிகழ்வாக இருந்தது.
மாலை 5 மணி அளவில் திரும்பவும் நகர்ப்புறம் வரையில் ஒரு நடை. அது இன்னும் மறக்க முடியாத ஒன்று. ஊரின் முக்கிய சாலைக்கு வந்து விட்டால் இரண்டு பக்கமும் ஒரு மலை சூழ்ந்த பிரதேசமாகக் காட்சியளிக்கும். காண்பதற்கு அத்தனை ரம்மியமாக இருக்கும். சிலுசிலுவென்ற காற்று மனதையும் குளிர்விக்கும். எங்கிருந்தோ ஒரு சினிமாக் கொட்டகையிலிருந்து திரைப்படம் ஓடும் காட்சிகளின் ஒலிவடிவம் துல்லியமாகக் கேட்கும். 'எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்' என்ற சந்திரோதயம் படத்தின் பாடல் காற்றில் தவழ்ந்து வந்து காதில் விழுந்த நிகழ்வு இன்றும் என் மனதை நிறைக்கிறது. அடுத்த நாளே நானும் மாமாவின் மைத்துனன் சீனுவும் அந்தப் படத்தைப் பார்த்த நினைவும் நெஞ்சில் அழியாமல் இருக்கிறது. இன்று மாமா, சீனு, அம்மா அனைவரும் நினைவுகளாகி விட்டனர்!
சீனுவையும் என்னால் மறக்க முடியாது. அது ஒரு நல்ல நட்பின் பரிணாமமாகத் திகழ்ந்தது என்றால் மிகையில்லை. குடியாத்த நினைவுகள் இன்றும் என் நெஞ்சில் குடி கொண்டிருக்கும் நினைவுகள். இனிய அந்த நினைவுகளை உயிர்ப்பித்தது இன்று நான் கேட்ட அந்தப் பாடல்தான் ! நீங்களும் கேளுங்கள் இதோ !
Comments
Post a Comment