"அய்யருக்கு இவ்வளோ பெரிய பையனா?"

வருடம் 1973. என் சித்தப்பா கே நடராஜன் அவர்கள் (அய்யர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்) கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம் .  கவிஞரைப் பற்றி அவர் என்னிடம் பேசாத நாளில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் வளர்ந்தது சித்தப்பாவிடம் தான் ! அந்த 14 முதல் 22 வயதுக்கு உட்பட்ட பருவத்தில் என்னை உருவாக்கி எடுத்தவர் அவர்தான் . எப்படி மனிதர்களிடம் பேசவேண்டும், பழகவேண்டும், நடத்தைகள் எப்படி இருத்தல் வேண்டும் என்று
அனைத்தையும் சொல்லித் தந்து மெருகேற்றியவர் அவரே. 

கவிஞரிடம் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம்.  ஒரு சமயம் சித்தப்பாவுக்கு நல்ல காய்ச்சல்.  இரண்டு நாட்களாக வேலைக்கு செல்ல இயலவில்லை . மாதத்தின் முதல் வாரம் . பணத்தேவை . வேலைக்குச் செல்லாததால் சம்பளம் வாங்க முடியவில்லை . அப்போதுதான் கவிஞரின் அலுவலகத்திற்கு போன் செய்து சொன்ன பிறகு என்னை அங்கு அனுப்பிப் பணத்தை வாங்கி வரச்சொன்னார். எனக்கு வயது 20 ஆகியிருந்தாலும் நான் ஒரு மௌனி .அதிகம் பேச பயப்படுவேன். 'இந்த பயமும் கூச்சமும் உனக்கு இருக்கக்கூடாது . நாலு பேரிடம் பேசிப் பழகினால் தான் சரியாகும்'  என்று சொல்லி என்னைப் பல இடங்களுக்கு அனுப்பிச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யவைப்பது அவர் வழக்கம்.

அன்று ஹென்ஸ்மென் ரோட்டில் இருந்த கவிஞரின் வீட்டைத் தேடிச் சென்றேன் நான். வெளியே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது . கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். உடம்பில் ஏதோ ஒரு படபடப்பு.  தோட்டப் பகுதியைக் கடந்து உள் வாசல் வரை சென்றேன்.  இரண்டு புறமும் நீளமான திண்ணைகள் அமைக்கப்பட்ட ஒரு வராந்தா ! அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார் . அவர் கவிஞரின் உதவியாளர் . 'யாரப்பா நீ ?' என்று கேட்டார் . நான் 'நடராஜய்யர் அனுப்பினார்' என்றுசொன்னேன் . உள்ளே வரச் சொல்லி ஒரு கவரை என்னிடம் கொடுத்தார்.

அச்சமயத்தில் தான் கவிஞர் வீட்டின் உட்புறத்தில் இருந்து வெளியே வந்தார்.  அவரைப் பார்த்ததும் பிரமித்துப் போனேன். அவரது பாடல்களால் மிகவும் கவரப் பட்டவன் நான்.  கவிஞரைநேரில்கண்டதும் மனம் பரபரத்தது. பேச்சு வரவில்லை. வணக்கம் கூடச் சொல்லாமல் அப்படியே நின்றிருந்தேன்.  கைக்கடிகாரத்தை சரிசெய்துகொண்டே என்னைப் பார்த்தவர் 'யார் இது'?' என்று உதவியாளரிடம் கேட்க, 'நடராஜய்யர் மகன்' என்று அவர் சொன்னார் . 'அட , அய்யருக்கு இவ்ளோ பெரிய பையன் இருக்கான்னு தெரியவே தெரியாதே' என்று சொல்லியபடியே சென்றவர் காரில் ஏறி அமர்ந்து  கொள்ளவும், வண்டி புறப்பட்டது. என் மனதின் பிரமிப்பு நீங்கவில்லை . எத்தனை பாடல்கள், எத்தனை பேச்சுகள் அவரைக் குறித்து சித்தப்பா சொல்லியிருக்கிறார் . அந்த பிரமிப்பிலும் படபடப்பிலும் அவருக்கு வணக்கம் சொல்லக் கூடத் தெரியாமல் நின்று விட்டேன் என்பதை இப்போது நினைத்தாலும் வெட்கமாக இருக்கிறது !

இரண்டு தினங்களுக்கு பிறகு சித்தப்பாவிடம் கவிஞர் என்னைப்பற்றிக் குறிப்பிட்டதும் சித்தப்பா 'அவன் என் அண்ணன் மகன் . என்னிடம் வளரும் பிள்ளை.

அண்ணா வெளியூரில் இருக்கிறார்' என்ற விவரங்களைக் கூறியதையும் சித்தப்பா என்னிடம் சொன்னது இன்னும் நினைவில் படமாக ஓடுகிறது.

கவிஞரைக் கண்ணாரக் கண்ட அந்த நாள் என்றும் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது !

கி.பாலாஜி
11.03.2020

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......